பெரம்பலூர் அருகே பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசர்களின் நூற்றுக்கும் மேற்பட்ட முட்டைகள் உள்ளிட்ட ஏராளமான கடல் வாழ் உயிரினங்களின் படிமங்கள், ஒரே இடத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அரசு பள்ளிக்கு அருகேயுள்ள ஏரியில் குடிமராமத்து பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக ஏரியில் மண் எடுக்க தோண்டியபோது, உள்ளே புதைந்திருந்த டைனோசர் முட்டை மற்றும் கடல்வாழ் உயிரின படிமங்கள் வெளிப்பட்டு உள்ளது.
அங்கு பல்வேறு அளவுகளில் டைனோசர் முட்டைகளை போன்ற உருவங்களில் ஏராளமாக கிடைக்கப் பெற்றுள்ளது.
அந்த டைனோசர் முட்டைகள் மாமிச கார்னோட்டாரஸ் மற்றும் சைவ சவுரபோட் டைனோசரின் முட்டைகளாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் தலைமுறைக்கு இப்பகுதி ஒரு காலத்தில் கடலாக இருந்தது என்பதற்கான சான்றாக, இதனை பாதுகாக்க வேண்டும் என்றும், இந்த பகுதியை தொல்லியல் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்றும் சமுக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.